வடகிழக்கு பருவமழையால் கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், ஒடையக்குளம், அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் அதிகளவில் நடைபெறுகிறது.
வரும் டிசம்பர் 3ம் தேதியன்று கார்த்திகை தீபம் என்பதால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பிருந்தே மண் பாண்ட தொழிலாளர்கள் பலரும், அகல் விளக்கு தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபம் ஏற்றி வழிபட களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பலர், விற்பனை செய்ய வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்திருந்தனர். இதனால் சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் 2 வாரத்திற்கு முன்பிருந்து வடகிழக்கு பருவமழையால், அகல்விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இப்போது மழைக்காரணமாக, மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட அகல் விளக்குகளை உலர வைக்க முடியாமல், குவித்து போடவேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காரணமாக, கார்த்திகைக்கு முன்பாக ஆர்டரின்படி அகல்விளக்கு உற்பத்தி கூடுதலாக இருக்குமா என்ற நிலையிலும், மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் உலர வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.