வடசென்னையில் உள்ள பகுதிகளில் மின்வாரியம் சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சிவசங்கர்
சென்னை: இன்று (29.10.2025) போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வடசென்னையில் உள்ள பகுதிகளில் மின்வாரியம் சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வடசென்னை புளியந்தோப்பு ராஜீவ் நகரில் தாழ்வான மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு விடுப்பட்ட அனைத்து மின்பகிர்மான பெட்டிகளையும் ஒரு மீட்டர் உயரத்தில் உயர்த்தும் பணியினை உடனடியாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
பின்பு தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை (CDH) வளாகத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் 110/11 கி.வோ துணைமின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள 33/11 கி.வோ துணைமின் நிலையம் மற்றும் தண்டையார்பேட்டை 230/33 / 11 கி.வோ துணைமின் நிலையத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்கு பின் தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் மின் தொடர்பான பணிகளில் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
உடன் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் மூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன், பழனிவேலன், செயற்பொறியாளர்கள் அசோகன், ஜெகதீஷ்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.