அமெரிக்காவின் 25% வரி நாளை முதல் அமலாவதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி திடீர் முடிவு
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தனது சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% என்ற நிலையிலேயே எவ்வித மாற்றமின்றி வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைத்து, ஒட்டுமொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெப்போவில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. பண்டிகை காலம் என்பதால், கடன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, வங்கிகளுக்கான விளிம்பு நிலை வசதி மற்றும் வங்கி வட்டி விகிதம் 5.75% ஆகவும், நிலை வைப்பு வசதி விகிதம் 5.25% ஆகவும் தொடரும். நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 2.1% ஆகக் குறைந்திருந்தது. அதேசமயம், நாளை (ஆகஸ்ட் 7) முதல் இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதிக்க உள்ளதால், வெளிப்புற அபாயங்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
2026ம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தனது கணிப்பை, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 6.5% ஆகவே ரிசர்வ் வங்கி தக்கவைத்துள்ளது. முதல் காலாண்டில் 6.5%, இரண்டாம் காலாண்டில் 6.7%, மூன்றாம் காலாண்டில் 6.6%, நான்காம் காலாண்டில் 6.3% வளர்ச்சி இருக்கும் என காலாண்டு வாரியாக கணிக்கப்பட்டுள்ளது. 2026ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் சராசரியாக 3.1% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி தற்போது கணித்துள்ளது; இது முந்தைய கணிப்பான 3.7%-ஐ விடக் குறைவு. இருப்பினும், 2027ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் 4.9% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட கணிப்பின்படி ரிசர்வ் வங்கியின் 4% இலக்கைத் தாண்டியதாகும். வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகள், குறிப்பாக காய்கறிகளின் விலைகள், நிலையற்றதாக இருக்கலாம் என்று நிதிக் கொள்கைக் குழு குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் குறைந்திருந்தாலும், புதிய வரிகள் மற்றும் இறக்குமதி தொடர்பான அழுத்தங்கள் இருப்பதால், எதிர்கால விலை நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் உள்ள அபாயங்கள் சமநிலையுடன் இருக்கிறது என்றாலும், எதிர்கால முடிவுகள் மாறிவரும் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்தே எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.