2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்!
நோபல் பரிசு (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.
1833 அக்டோபர் 21 அன்று, ஸ்வீடன் ஸ்டாக் ஹோம் நகரில் பிறந்த ஆல்ஃபிரட் நோபல், ஒரு வேதியியலாளராகவும், பொறியாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார்.
இவர் வாழ்நாளில் நடந்தேறிய ஒரு நிகழ்ச்சிதான், இவரை நோபல் அறக்கட்டளையை உருவாக்குவதற்கும், நோபல் பரிசு அறிவிப்பதற்கும் காரணமாக அமைந்தது என்பது வியப்பிற்குரிய செய்தி மட்டுமல்ல… நோபலின் வாழ்வில் திருப்புமுனையாக இது அமைந்தது.
1894ஆம் ஆண்டு நோபல் போஃபர்ஸ் இரும்பு மற்றும் எஃகு ஆலையை வாங்கி, அதை ஒரு பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக மாற்றி அமைத்தார். கார்டைட் (Cardite) என்ற பிரிட்டனின் கண்டுபிடிப்பான புகையில்லா வெடி பொருளுக்கு முன்பே, இவர் பாலிஸ்ட்டிக் உள்ளிட்ட புகையில்லா ராணுவ வெடி பொருட்களைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளும் டைனமைட் உள்ளிட்ட 355 கண்டுபிடிப்புகளும், இவருக்கு அளவில்லா செல்வத்தைத் தந்தன.
1888ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி தான் இவரது எண்ண ஓட்டத்தை மாற்றியது எனலாம். இவரது சகோதரர் லுத்விக் காலமானதை, இவர் காலமானார் என்று கருதி, ஒரு பிரெஞ்சு செய்தித்தாள், “மரணத்தின் வணிகர் இறந்தார்”என்று செய்தியை வெளியிட்டது. இதைக்கண்ட நோபல், அழிவு தரும் ராணுவ வெடி மருந்துகளை கண்டுபிடித்ததால் தான் இப்படி, தான் வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறோம் என்று கருதி தன் செல்வத்தை எல்லாம் தன் உயில் வாயிலாக மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களுக்கு பரிசாக பணமாகச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார் என்பதுதான் வரலாறு.
ஆல்ஃபிரட் நோபல் தனது கடைசி உயிலில் கொடுத்த செல்வத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட நிதியின் மூலம் நிறுவப்பட்ட நோபல் பரிசுகள் 1901 முதல் வழங்கப்பட்டுவருகின்றன. சில ஆண்டுகள் ஒரு பரிசுகூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபல் பரிசு திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபலின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
நடப்பு ஆண்டான 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு கடந்த 6ம் தேதி முதல் ஒவ்வொரு நாளாக வெளியிடப்பட்டது. அதன்படி முதல் நாளான 6ம் தேதி மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ.பிரன்கோ (64) மற்றும் ஃபிரெட் ராம்ஸ்டெல்(64), ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சககுச்சி(74) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. உடல் உறுப்புகளை நோய் எதிர்ப்பு செல்கள் தாக்காமல் தடுத்து முறைப்படுத்தும் ‘டி’ செல்களை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது.
இதற்கிடையே இரண்டாம் நாளான 7ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க விஞ்ஞானிகளான ஜான் கிளார்க்(83), மைக்கேல் H.டெவோரெட்(72), ஜான் எம்.மார்ட்டினிஸ்(67) ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மின்காந்தச் சுற்றில், மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வுக்காக இந்த மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான 8ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானது. சுசுமு கிடாகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் சுசுமு கிடாகவா ஜப்பானில் உள்ள க்யோடோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்
கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருக்கிறார்கள். உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்துளிக்கப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு நான்காம் நாளான 9ஆம் தேதி ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைத்திக்கான நோபல் பரிசு ஐந்தாம் நாளான 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அக்டோபர் 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று மதியம்தான் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்கப் பதக்கம், பட்டயம், ரொக்கப்பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்ஃபிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்படும். மேலும் நினைவுப் பொருட்களில் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.