2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் யாருக்கு? இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள்
நார்வே: 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் விருதுக்கான தேர்வு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு என்பது பெருமை மிகு விருதான இது சர்வதேச அளவிலான சமூக சேவகர்கள், பொதுநல அரசியல் தலைவர்கள், போர் நிறுத்த நடவடிக்கை குழு உறுப்பினர்களுக்கு 1903ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நாடாளுமன்றம் நியமிக்கும் சிறப்பு குழு தேர்வு செய்து வருகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
1895ம் ஆண்டு ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃ பிரட் நோபலின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஒத்துள்ள ஒருவருக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் தடைகளை திரும்ப பெறுவதற்கும் அல்லது குறைப்பதற்கும் அமைதி மாநாடுகளை நிறுவுவதற்கும், ஊக்குவிப்பதற்கு பங்களிப்பவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதி உடையவராவார். நாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலகத்தலைவர்கள், வரலாறு, சமூக அறிவியல், சட்டம் மற்றும் தத்துவப் பல்கலை கழக பேராசிரியர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் உள்ளிட்டவர்கள் நோபல் பரிசுக்கான பெயரை முன்மொழியலாம்.நோபல் தேர்வுக் குழு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆய்விட்டு, ஆலோசித்து குறுகிய பட்டியலை உருவாக்குகிறார்கள்.
பின்னர் ஒவ்வொரு வேட்பாளரும் நிரந்தர ஆலோசகர்கள் மற்றும் நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக் குழு மாதத்திற்கு ஒரு முறை கூடி பரிந்துரைகள் பற்றி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்ட முயலும். பரிந்துரைப் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வெளியிடும் சுதந்திரம் பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே உண்டு. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பெயர்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேட்டோ, ஹாங்காங் ஆர்வலர் சௌ ஹாங்-டங், மற்றும் கேனடாவின் மனித உரிமை வழக்கறிஞர் இர்வின் கோட்லர் ஆகியோர் அடங்குவர். கம்போடியா, இஸ்ரேல், பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பிறகு அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு டிரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு அமெரிக்க அதிபர் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல் வசப்பட வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது. இந்த முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐநா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழுடன் இந்திய மதிப்பீட்டில் சுமார் 10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான விடை வரும் 10ம் தேதி கிடைத்துவிடும்.