14 ஆயிரம் பேருக்கு ஜிஎஸ்டி நோட்டீசால் பரபரப்பு; பெங்களூருவில் இனி யுபிஐ பரிவர்த்தனை கிடையாது: பணமாக கேட்கும் வணிகர்கள்
பெங்களூரு: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் யுபிஐ (கூகுள்பே) மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டிய கடைகள், வணிகர்கள் என 14,000 பேருக்கு வணிகவரித்துறை ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு மாநில வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. தெருவோரக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், டீக்கடைகள், பூக்கடைகள் போன்றவர்களுக்குக் கூட ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால், அவர்கள் எல்லாம் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெங்களூருவில் பெரும்பாலான சிறு வணிகர்கள், இனிமேல் யுபிஐ பரிவர்த்தனையே கிடையாது என்று தங்கள் கடைகளில் ஒட்டியிருந்த கியூஆர் கோடை அகற்றிவிட்டனர். வாடிக்கையாளர்களிடம் பணமாக கேட்கின்றனர். அனைத்துக்கும் பணமாக கொடுப்பது வாடிக்கையாளர்களுக்கு பிரச்னையாகவே உள்ளது. ஏனெனில் யுபிஐ பரிவர்த்தனைக்கு பழகிவிட்டதால் மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்பதைவிட, யுபிஐ பரிவர்த்தனைக்கு மக்களை பழக்கிவிட்டு, பணப்புழக்கத்தையே வங்கிகள் குறைத்துக்கொண்டதால் ஏடிஎம்களில் போதுமான பணமும் இல்லை என்பதும் நிதர்சனம்.