பட்டாசு வெடித்ததில் தகராறு என்எல்சி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் கைது
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவரது மகன் பார்த்திபன்(26). என்எல்சி ஒப்பந்த தொழிலாளி. கடந்த 19ம் தேதி இரவு இவரது வீட்டு அருகே அதே பகுதியை சேர்ந்த வேலு (30), ராமர் (26) ஆகியோர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி பார்த்திபன் வீட்டில் இருந்த ஆடுகளின் மீது விழுந்தது. இதை பார்த்திபன் தட்டி கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வேலு, ராமர் இருவரும் பார்த்திபன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, வேலு, ராமர் ஆகியோரை தேடி வந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது செம்மேடு கெடிலம் ஆற்று பாலத்தில் இருந்து கீழே குதித்த வேலுவின் காலில் எலும்பு முறிந்தது. அவரையும், ராமரையும் போலீசார் கைது செய்தனர். வேலு, ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.