என்எல்சி நிறுவனம் வாங்கியது சாலையை சுத்தம் செய்ய ரூ.42 லட்சத்தில் புதிய இயந்திரம்
நெய்வேலி : நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந்து முதலாவது சுரங்கத்தில் உள்ள என்எல்சி பங்கருக்கு பழுப்பு நிலக்கரி கடந்த சில மாதங்களாக லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதிகள் ஏற்படுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், என்எல்சி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் அறிவுறுத்தலின்பேரில் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் பொதுமக்களின் நலன் கருதி என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் பேசி காற்று மாசு தடுக்கும் வகையில் சுத்தம் செய்ய இயந்திரம் வாங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று என்எல்சி நிறுவனத்தின் சார்பில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய இயந்திரம் வாங்கப்பட்டது.
இந்த இயந்திரம் என்எல்சி முதலாவது சுரங்க பங்கில் இருந்து இரண்டாம் நிலக்கரி சுரங்கம் வரை சாலையில் உள்ள இருபுறமும் உள்ள பழுப்பு நிலக்கிரி சாம்பல் துகள்களை சுத்தம் செய்யும் பணிக்காக வாங்கப்பட்டது.
நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் கலந்துகொண்டு புதிதாக வாங்கப்பட்ட இயந்திரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் என்எல்சி பொது மேலாளர்கள் குமார், நெடுஞ்செழியன், துணை பொது மேலாளர்கள் பூபதி, கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து என்எல்சி ஊழியர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக சாலையில் நிலக்கரித்துகள்கள் மற்றும் சாம்பல் பவுடர்களால் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது என்எல்சி நிறுவனம் சார்பில் வாங்கப்பட்ட சுத்தம் செய்யும் இயந்திரம் என்எல்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.