மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணி தீவிரம்: நாளை கூட்டணி கட்சியின் தலைவர் தேர்வு?
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். பீகாரில் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் வென்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில வரலாற்றிலேயே இல்லாத வகையில் 66 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது, ஆளும் அரசின் மீதான மக்களின் வலுவான ஆதரவைப் பறைசாற்றியது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போதைய பதவிக் காலத்திற்கான தனது ராஜினாமா கடிதத்தை அளித்து, புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, நிதிஷ் குமார் விரைவில் ஆளுநர் ஆரிப் முகமது கானைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பதவியேற்பு விழா வரும் 19 அல்லது 20ம் தேதிகளில் (புதன் அல்லது வியாழக்கிழமை) நடைபெற வாய்ப்புள்ளது; நாளை (திங்கள்) தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்’ எனக் கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவைப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையகங்களில் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சமீபத்தில் நடந்த சந்திப்புகள், கூட்டணியின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளிடமிருந்து பெரிய அளவில் சவால்கள் எழாத நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை முதல்வராக பதவியேற்பதன் மூலம் 10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.