நித்யானந்தா வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
மதுரை: நித்யானந்தா மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் கோதைநாச்சியார்புரத்தில் உள்ள எனது விவசாய நிலத்தை நித்யானந்தா தியான பீடத்திற்கு ஆன்மீகம் மற்றும் மதம் சம்பந்தமான பயன்பாட்டுக்காக தானமாக கொடுத்தேன்.
நித்யானந்தாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அந்த நிலத்தை நீதிமன்றம் மூலம் திரும்ப பெற்றேன். இதனால் ஆத்திரமடைந்த நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் என்னுடைய பட்டா நிலத்திற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும் நோக்கில் அடாவடி செய்து வருகின்றனர். இதனால் சந்திரன் என்பவரை நிலத்தின் பாதுகாவலராக நியமித்தேன். அவருக்கும் நித்யானந்தாவின் சீடர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.
சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பினர். சந்திரன் விருதுநகர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓராண்டாகியும் விசாரணையை போலீசார் விரைவுபடுத்தவில்லை. அந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், ‘‘நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.