நீலகிரியில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் சேவல் கொண்டை மலர்கள் (ஸ்பேத்தோடியம்) பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு தாவரங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு நடவு செய்யப்பட்டன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் தாவரங்கள், மரங்கள் போன்றவைகளும், ஆஸ்திரேலியா கண்டத்திலும் இருந்தும் பல்வேறு தாவரங்கள் மற்றும் கொண்டு வந்து நடவு செய்யப்பட்டன. இவைகளில் சில மரங்களில் பூக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஒரே சமயத்தில் இந்த மலர்கள் பூக்காமல், ஒவ்வொரு சீசனிலும், அதவாது வேறுபட்ட மாதங்களில் பூப்பதால், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைக்கிறது. குறிப்பாக, நீல நிறத்தில் பூக்கும் ஜெகரண்டா மலர்கள், பாட்டில் பிரஸ் மலர்கள், ரெட் லீப், செர்ரி மலர்கள் போன்றவைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலையோரங்களில், தேயிலை தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சேவல் கொண்டை மலர்கள் எனப்படும் ஸ்பேத்தோடியம் கேம்பனுலேட்டா மலர்கள் அதிகளவு பூத்துள்ளது.
ஆண்டிற்கு இரு முறை பூக்கும் இந்த மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சிவப்பு நிறத்தில் மரங்கள் முழுவதும் பூத்துள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிள் இதனை கண்டு ரசித்து செல்வதுடன் போட்டோவும் எடுத்துச் செல்கின்றனர். இந்த மரத்தின் இலை மற்றும் பட்டையில் இருந்து எடுக்கப்படும் மருந்து மலேரியா நுண் கிருமிகளை கட்டுப்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.