நீலகிரி தெப்பக்காடு முகாமில் யானையை கத்தியால் வெட்டிய பாகன் பணிநீக்கம்: அதிகாரிகள் உத்தரவு
ஊட்டி: முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானையை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்த யானை குட்டிகள், மனிதர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் அட்டகாசம் செய்யக்கூடிய யானைகள் பிடித்து வரப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன், ஒரு உதவியாளர் என யானையை பராமரித்து வருகின்றனர்.
வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறுசிறு பணிகள் செய்வதோடு, தங்களுக்கு தேவையான பசுந்தழைகளை வனப்பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம். அதேபோல் வளர்ப்பு யானைகளை பாகன்கள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். அபயாரண்யம் யானைகள் முகாமில் சுமங்கலா என்ற யானை உள்ளது. இதற்கு கிருமாறன் என்பவர் பாகனாக உள்ளார். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு சென்றாலும், அதிகாலையில் முகாமிற்கு வந்து ஆண் யானைகளை தாக்குவதும், முட்டி தள்ளுவதும் வாடிக்கை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற சுமங்கலா யானை அதிகாலையில் முகாமிற்கு வந்து சங்கர் என்ற யானையை முட்டி கீழே தள்ளியது.
இதனால், சங்கர் யானை பிளிறி சத்தம் போட்டது. சத்தம் கேட்ட சங்கர் யானையின் பாகன் விக்கி என்பவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது சங்கர் யானை கீழே விழுந்து கிடந்தது. இதனால் ஆத்திரமடைந்த விக்கி குச்சியால் தாக்கி சுமங்கலா யானையை தடுத்து அப்புறப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் சுமங்கலா யானை மீண்டும் சங்கர் யானையை தாக்கியது. இதனால் கோபமடைந்த விக்கி கத்தியை எடுத்து யானையின் பின்னங்காலில் வெட்டினார். அதன் பிறகு சுமங்கலா யானை அந்த இடத்தைவிட்டு அகன்றது.
விக்கி கத்தியால் வெட்டியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த சுமங்கலாவின் பாகன் கிருமாறன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் துணை இயக்குனர் வித்யா ஆகியோர் அங்கு சென்று காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். யானைக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அது நல்ல நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி யானையை வெட்டிய பாகன் விக்கியை உடனடியாக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.