நீலகிரியில் வார்டு சிறப்பு கூட்டங்கள் தீவிரம்
*பொதுமக்களின் குறைகள் பதிவு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள், பதிவு செய்யும் பணி துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு வார்டு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள அடிப்படை சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்கா பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை வார்டு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இந்த சிறப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, இந்த கூட்டங்களில், சம்பந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளில் நேற்று முன்தினம் முதல் இந்த வார்டு கூட்டங்கள் துவங்கி நடந்து வருகிறது. இதில், பொதுமக்கள் குறைகளை, கோரிக்கை மனுவாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர். நேற்று ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
பெரும்பாலானோர் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, நடைபாதை சீரமைப்பு, கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை சீரமைப்பு போன்றவைகளுக்கு மனு அளித்தனர். ஊட்டி நகராட்சி 22வது வார்டுக்கான சிறப்பு கூட்டம் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது. வருவாய் அலுவலர் காயத்திரி முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை பதிவு செய்தனர். அதேபோல், 18வது வார்டுக்குட்பட்ட சிறப்பு வார்டு கூட்டம் கவுன்சிலர் முஸ்தபா தலைமையில் நடந்தது. இதில், நகராட்சி அதிகாரி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
அதேபோல், 7வது வார்டுக்குட்பட்ட சிறப்பு வார்டு கூட்டம் கவுன்சிலர் விசாலாட்சி தலைமையில் நடந்தது. நகர அமைப்பு அலுவலர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து, முக்கிய மூன்று கோரிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
மஞ்சூர்: மஞ்சூர், கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட முள்ளிமலை, சேரனுார், கரியமலை, பள்ளிமனை, கீழ்குந்தா மேல்பகுதி உள்ளிட்ட 6 முதல் 10 வரையுள்ள வார்டுகளில் சிறப்பு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், கவுன்சிலர்கள் பாபு, மாடக்கன்னு, ராஜேஸ்வரி, ஆனந்த்குமார் மற்றும் ஊர் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாருதல், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளுதல், தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தரப்பில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் சிறப்பு வார்டு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
நகர் மன்ற தலைவர் பரிமளா, துணைத்தலைவர் சிவராஜ் மற்றும் அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் நகராட்சி ஆணையர் ஸ்வேதா ஸ்ரீ மேற்பார்வையில் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று பதிவு செய்து கொண்டனர்.