நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு..!!
உதகை: நீலகிரி மாவட்டம் தேவர்சோலா பகுதியில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலா, பாடந்துறை போன்ற பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் புலி ஒன்று 13 மாடுகளை வேட்டையாடி அச்சுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி அதிநவீன கேமராக்கள் பொறுத்தியுள்ளனர். இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வனப்பகுதிக்குள் புலி தென்படும்பட்சத்தில் கால்நடை மருத்துவர்கள் யானை மேல் அமர்ந்து மயக்க ஊசி செலுத்துவதற்காக முதுமலையிலிருந்து வசீம், விஜய் என்ற இரு பயிற்சி பெற்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இரு யானைகள் மூலமாக வனத்துறையினர் உள்ளே சென்று புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு புலி தென்பட்டால் கால்நடைத்துறை மருத்துவர்களுடன் யானை மேல் அமர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.