நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் முக்கூருத்தி தேசிய பூங்காவில் பறவைகள் கணக்கெடுப்பு
இதற்காக 25 ஈர நில பகுதிகள் தேர்வு செய்யப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல பகுதிகளில் உள்ள ஒம்பெட்டா, ஒம்பர்லா, மத்திமரவயல் உள்ளிட்ட நீர்நிலைகள், மாயாறு உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. இதேபோல் முக்கூருத்தி தேசிய பூங்காவின் ஐந்து நீர் நிலைகளில் ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில் முக்கூருத்தி தேசிய பூங்காவில் கிரே வேக்டைல், வைய்ட் வேக்டைல், வைய்ட் பரோட் வேக்டைல், காமன் கிங்பிஷர், லிட்டில் கார்மரன்ட், லிட்டில் ஈக்ரட், பிராமினி கைட் உள்ளிட்ட பறவை இனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், கிரஸ்டட் செர்பண்ட் ஈகிள், நீலகிரி பிளைகேட்சர், நீலகிரி லாபிங்திரஸ் ஆகிய நிலவாழ் பறவைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நீலகிரி லாபிங்திரஸ், நீலகிரி பிளைகேட்சர் ஆகிய பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் இயல்புடைய அரிய வகை பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.