நீலகிரி கூடலூர் அருகே 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்..!!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. கூடலூர் அருகே உள்ள பகுதிகளில் கடந்த 7 வருட காலமாக ராதாகிருஷ்ணன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்த காட்டுயானையானது அப்பகுதியில் 12பேரை கொன்றுள்ளது. இப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தியதன் பேரில் காட்டு யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகளான விஜய், வசீம், பொம்மன், சீனிவாசன் ஆகிய 4 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் இந்த பகுதியில் யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் பட்சத்தில் யானையை கொண்டு செல்வதற்காக வாகனங்களும், ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டு யானை அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து அதனை கண்காணிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.