நிகிதா நகை திருட்டு புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார், நகை திருட்டு புகாரின்பேரில், கடந்த ஜூன் 28ம் தேதி தனிப்படை போலீசார் விசாரணையின்போது உயிரிழந்தார். இது கொலை வழக்காக மாற்றப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த ஜூலை 14ம் தேதி முதல் டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அஜித்குமார் சகோதரர் நவீன், அவரது தாய் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி ஆக.20ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நகை திருட்டு தொடர்பான பேராசிரியை நிகிதா அளித்த புகார் குறித்து விசாரிக்கவில்லை என கூறியிருந்தனர். இதையடுத்து நகை திருட்டு புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதன்பேரில் ஜூன் 27ம் தேதி நிகிதா அளித்த நகை திருட்டு புகார் குறித்து நேற்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நிகிதா, அவரது தாயார், அஜித்குமாருடன் பணியாற்றிய ஊழியர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் திருப்புவனம் போலீசார் ஆகியோரிடம் மீண்டும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் தான் உண்மையில் நகை காணாமல் போனதா? அல்லது பொய் புகாரா என்பது தெரிய வரும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.