நைஜீரியாவில் துயரம்; 12 ஆசிரியர், 300 மாணவர்கள் கடத்தல்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதி அமைப்பினர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளி குழந்தைகளை கடத்தி சென்றனர். இந்த தீவிரவாத அமைப்பினர், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த படுபாதக செயலில் ஈடுபட்டனர். அதேபோல் தற்போதும் நைஜீரியாவை சேர்ந்த ஒரு கும்பல், பள்ளி குழந்தைகளை கடத்தி செல்லும் சம்பவங்களில் ஈடுபடுகிறது. அதாவது, நைஜீரியாவின் வட பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள், இங்குள்ள கிறிஸ்தவ பள்ளிகளை குறிவைத்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தின் மகா நகரில் 25 பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் நைஜர் மாநிலத்தில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் 12 ஆசிரியர்களும் வனப்பகுதிக்குள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என்று பள்ளி நிர்வாக தலைவர் புலுஸ் தாவா யோகனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பள்ளியின் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டு கடத்தி சென்றுள்ளனர். இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டவர்களை மீட்க நைஜீரிய அரசு சிறப்பு படைகளை அமைத்துள்ளது.
இந்த சிறப்பு படைகளுடன் உள்ளூர் வேட்டைக்காரர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு படையினரும், குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நைஜர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பிணை தொகைக்காக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குவாரா மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கி ஏந்திய சிலர் தாக்குதல் நடத்தி இருவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் 38 பேரை கடத்தி சென்றனர். இவர்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும், 69,000 அமெரிக்க டாலர் பணம் வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.