ஃபேஷன் டெக்னாலஜி படிக்க NIFT-2026 நுழைவுத்தேர்வு!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்பது இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், 1986 முதல் செயல்பட்டுவருகிறது. பெங்களூரு, போபால், சென்னை, காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, நியூடெல்லி, பாட்னா, பன்ச் குலா, ரேபரேலி, ஷில்லாங், காங்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், நகர் என 17 இடங்களில் நிஃப்ட் கல்வி நிறுவன வளாகங்கள் உள்ளன.
வடிவமைப்பு (Designing), வடிவமைப்புத் தொழில்நுட்பம் (Designing Technology), மேலாண்மை (Management) உள்ளிட்ட வடிவமைப்புத் துறைகளில், இளநிலை, முதுநிலை ஆய்வுப்படிப்புகளுக்கான 5000க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுள்ளது. நிஃப்ட் படிப்புகளில் சேர, அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நிஃப்ட்டில் வழங்கப்படும் படிப்புகள்: பேச்சுலர் ஆஃப் டிசைன் (B.Des), பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (B.FTech), மாஸ்டர் ஆஃப் டிசைன் (M.Des), மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் (M.FM), மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (M.FTech), B.Des இளநிலைப் படிப்பில் ஆக்சசரி டிசைன், பேஷன் கம்யூனிகேஷன், பேஷன் டிசைன், நிட் வேர் டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என்ற துறைகள் உள்ளன. B.FTech இளநிலைப் படிப்பில் அப்பேரல் ப்ரொடக்ஷன், டிசைன், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், அப்பேரல் ப்ராடக்ட் டெவலப்மென்ட் என்ற பிரிவுகள் உள்ளன.
வயது வரம்பு: இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு 24 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வு உண்டு. முதுநிலைப் படிப்பிற்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
கல்வித் தகுதி: B.Des படிப்பிற்கு 2 அல்லது அதற்கு சமமான படிப்பில் ஏதேனும் ஒரு குழுவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.FTech படிப்பில் சேர 2வில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.Des படிப்பிற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது நிஃப்ட், என்.ஐ.டி இளநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
M.FM படிக்க இளநிலைப் படிப்பு அல்லது நிஃப்ட், என்.ஐ.டி இளநிலைப் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.FTech படிக்க நிஃப்ட், என்.ஐ.டி இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிஃப்ட் படிப்புகளில் சேர, அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுகளை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency) நடத்துகிறது. இதில் B.Des படிப்பிற்கு CAT- Creative Ability Test, GAT - General Ability Test என்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பின், ST - Situation Test தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். B.FTech, M.FM, M.FTech படிப்பிற்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். M.Des படிப்பில் சேர கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் மற்றும் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். நிஃப்ட் நுழைவுத்தேர்வில் Written Exam, Situation Test, Group Discussion, Interview என்ற அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள்.
B.Des, M.Des ஜெனரல் எபிலிட்டி டெஸ்டிங்குக்கு Communication Ability, English Comprehension, Quantitative Ability, Analytical Ability, Current Affairs என்பது பாடத்திட்டம் ஆகும்.
B.FTech, M.FTech, M.FM எபிலிட்டி டெஸ்டுக்கு English Comprehension, Case Study,Quantitative Ability,Analytical and Logical Ability, Current Affairs பாடத்திட்டமாக இருக்கும்.
UG, PGக்கான கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்டில், தனித்திறன், உற்று நோக்குதல், கோட்பாடு உருவாக்கம், வடிவமைப்புத் திறன், ஆக்கப்பூர்வ நிற வடிவமைப்பு இவை சோதிக்கப்படும்.சிச்சுவேஷன் டெஸ்டில் பொருள் களைக் கையாளுதல், ஆக்கப்பூர்வ திறன்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருட் களைக் கையாளுதல் சோதிக்கப்படும். கலந்துரையாடலில், கோட்பாடுகள், இன்டர் பர்சனல் திறன்கள், புதிய கருத்துருக்கள், உள்வாங்கல், செய்தித்தொடர்புத் திறன், தலைமைப் பண்பு ஆகியவை சோதிக்கப்படும். நேர்முகத்தேர்வில் கேரியர் ஓரியன்டேஷன், சாதனைகள், செய்தித்தொடர்பு, பொது அறிவு, ஆக்கப் பூர்வ சிந்தனை ஆகியவை இருக்கும்.
நுழைவுத்தேர்வுக் கட்டணம்: General /OBC /EWS பிரிவினருக்கு ரூ.3000. SC /ST /PwD பிரிவினருக்கு ரூ.1500 ஆக இருக்கலாம்.
நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.nift.admission.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் மூன்றாம் வாரம் வெளிவரும்.
ஜனவரி முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். நுழைவுத்தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்திலும் மற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும் வெளிவரும்.
- ஆர்.ராஜராஜன்