தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ இன்று அதிரடி சோதனை: செல்போன், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திண்டுக்கல்: தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் கடந்த 2019 பிப்ரவரியில் மதமாற்றத்தை எதிர்த்தாக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இதன்படி, திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்துல்லா. எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர். இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு, கோவையிலிருந்து என்ஐஏ டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் 4 அதிகாரிகள் வந்து சோதனையை தொடங்கினர். இதில் குடும்பத்தினரின் செல்போன், எஸ்டிபிஐ கட்சி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை காலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது. மேலும், வரும் 25ம் தேதி சென்னை என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அப்துல்லாவுக்கு சம்மன் கொடுத்துவிட்டு சென்றனர். என்ஐஏ.வின் இந்த சோதனையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் வீட்டு வாசல் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் உமர் (75). இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 7 பேர் சோதனையை தொடங்கினர். சோதனை 8.40 மணிக்கு நிறைவடைந்தது. ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி 12வது வார்டு சம்சுதீன் காலனியை சேர்ந்தவர் முகமது யாசின். எலக்ட்ரீசியன். இவரது வீட்டுக்கு 10க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை 6 மணிக்கு வந்து சோதனையை தொடங்கி நடத்தினர். வீட்டில் உள்ள செல்போன், ஆவணங்கள், டைரிகளை கைப்பற்றினர். முகமது யாசின் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது.
கொடைக்கானல்: ராமலிங்கம் கொலை தொடர்பாக ஏற்கனவே, கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதன்படி, நகரில் கலையரங்கம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பிரியாணி கடை, கான்வென்ட் சாலையில் உள்ள மற்றொரு பிரியாணி கடை, பிளிஸ்வில்லா பகுதியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர் அப்துல்லா வீடு மற்றும் முபாரக் வீடு, பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள ஒரு இடம் என மொத்தம் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை புதுமனை தெற்கு தெருவில் வசிக்கும் முகமது அலி என்பவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணியளவில் என்ஐஏ அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடந்து. இதையொட்டி முகமது அலியின் வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெளியாட்கள் அந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிற்குள் அதிகாரிகள் தீவிரமாக ஆவணங்களை சரிபார்த்து, விசாரணை மேற்கொண்டனர். முகமது அலியின் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனைக்கான காரணம் குறித்து என்ஐஏ தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் 9 இடங்களில் நடந்த இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.