அடுத்த வாய்ப்பு யாருக்கு?
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67, இந்திய துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று கூறுகிறது. இந்த தேர்தலில், ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்று, 2022 ஆகஸ்ட் 11 அன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர், தனக்கு எதிராக போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது ஐந்து ஆண்டுகால பதவியில், இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், தன்கரின் வெளியேற்றம் என்.டி.ஏ.வுக்குள் ஒரு அவசர மோதலை தூண்டியுள்ளது. இவரது ராஜினாமா கடிதத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்பிறகு, 15வது துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21 என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவு நாளிலேயே அறிவிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிப்பதற்கான தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களையும் நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை நடந்த துணை ஜனாதிபதி தேர்தலின்போது லோக்சபாவின் பொதுச்செயலாளர், தேர்தல் அலுவலராக செயல்பட்டார். ஆனால், இம்முறை, ராஜ்யசபாவின் பொதுச்செயலாளர் தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ராஜ்யசபாவின் பொதுச்செயலாளராக பிரமோத் சந்திர மோடி செயல்பட்டு வரும் நிலையில், அவர்தான் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அலுவலராக செயல்பட உள்ளார். பிரமோத் சந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். துணை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளின் எம்.பி.க்கள் ஓட்டளித்து தேர்வு செய்ய உள்ளார்கள். இரு அவைகளின் மொத்த பலம் 782 ஆகும். இதில், வெற்றிபெற 391 வாக்குகள் தேவைப்படும்.
தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு மக்களவையில் உள்ள 542 உறுப்பினர்களில், 293 பேர் ஆதரவை என்.டி.ஏ பெற்றுள்ளது. அதேபோல், மாநிலங்களவையில் உள்ள 240 உறுப்பினர்களில், 129 பேர் ஆதரவையும் என்.டி.ஏ பெற்றுள்ளது. ஆக மொத்தம் 422 பேர் ஆதரவை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. அதனால், இந்த தேர்தலை பொறுத்தவரை மல்லுக்கட்டு, இழுபறி, கடும் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஒன்றிய அரசின் ஆதரவை பெறும் நபரே துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. தேர்வு செய்யப்படும் நபர், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு அலுவலகத்தை அலங்கரிக்க போகிறார். அவர், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது. நாம் யார் தயவில் வென்றோம் என்பதைவிட, நாட்டு மக்களுக்கு நமது பதவிக்காலத்தில் என்ன செய்தோம் என்பதே முக்கியம். அதை உணர்ந்து, புதிய துணை ஜனாதிபதி, நீதி தவறாமல் பணியாற்றினால் சிறப்பு.