ரூ.1.3 லட்சம் கோடி கேட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது டிரம்ப் அவதூறு வழக்கு
நியூயார்க்: தனக்கு எதிராக பல ஆண்டாக தவறான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது ரூ.1.3 லட்சம் கோடி கேட்டு அதிபர் டிரம்ப் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப் தரப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மற்றும் அதன் 2 பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், கடந்த பல ஆண்டாக தனக்கும் தனது குடும்பம், தொழில், அரசியலுக்கு எதிராகவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை வெளியிடுவதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். இந்த வழக்கு குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னைப் பற்றி பொய் சொல்லி அவதூறு பரப்புகிறது.
அப்பத்திரிகை ஜனநாயக கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டது’’ என கூறி உள்ளார். முன்னதாக, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கு பிறந்தநாள் கடிதம் அனுப்பியதாக செய்தி வெளியிட்ட தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு எதிராக டிரம்ப் ரூ.88 ஆயிரம் கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.