புதிய சிந்தனை இல்லாத கட்சி எதற்கு? அரசியலில் நடிகர் விஜய் ஜெயிக்கவே முடியாது: தமிழிசை பேட்டி
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் ஜெயிக்கவே முடியாது என்று தமிழிசை கூறினார். மூவரசன்பட்டு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு, நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான். அடுத்த இடத்துக்கு சீமானும், விஜய்யும் போட்டிப்போட்டு கொள்ளலாம். விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்தை சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார். புதிய சிந்தனை இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை. விஜய் மாநாட்டில் பவுன்சர் தூக்கி போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. தூக்கிப் போட்டவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதவரால் எப்படி ஆட்சி நடத்த முடியும். கலாட்டா, சலசலப்பு தான் செய்ய முடியும். விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது என்பதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.