புதிய கொள்கை தயாரிக்கும் பணி விறுவிறு மக்கள் அதிகமுள்ள இடங்களில் மதுக்கடைகளை மூட திட்டம்: விலைகளை அதிகரிக்கவும் அரசு முடிவு
புதுடெல்லி: டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கடந்த 2021ம் ஆண்டு அமல்படுத்தியது. அதில், முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த கொள்கை வாபஸ் பெறப்பட்டது. பின்னர், அதே ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. புதிய கொள்கை தயாரிக்கும் பணியில் ஆம் ஆத்மி அரசு ஆர்வம் காட்டாத நிலையில், பழைய மதுபான கொள்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக பாஜவை சேர்ந்த ரேகா குப்தா பதவியேற்றார். இதையடுத்து, புதிய கொள்கை வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த ஒரு பணியையும் அரசு தொடங்கவில்லை. இதனால், கடந்த ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து ரேகா குப்தா உத்தரவிட்டார். தற்போது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த கொள்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துணை முதல்வர் பர்வேஷ் வர்மா தலைமையில் புதிய மதுபான கொள்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், புதிய மதுபான கொள்கையை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்நாடு, வெளிநாட்டின் பிரீமியம் மதுபானங்கள் கிடைப்பதை இந்த கொள்கை உறுதி செய்யும்.
இதனால், டெல்லி வாசி தற்போது, அண்டை மாநிலங்களை விட டெல்லியில் மதுபானங்களின் விலை குறைவாக இருக்கிறது. தற்போது, அந்த விலையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், புதிய மதுபான கொள்கை நடைமுறைக்கு வரும்போது சரக்குகளின் விலை அதிகரிக்கும். மேலும், அதிகளவு மக்கள் வசிக்கும் இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்படும். இதனால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.