தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்
திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை திருப்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். திருப்பூர் அங்கேரிபாளையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிரிஸ்துராஜ் தலைமை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான 33 வகையான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் 265 கிராம ஊராட்சிகளுக்குமான விளையாட்டு உபகரணங்களை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளை பிரிதிபலிக்கவும் தமிழ்நாட்டின் வரைபடத்தை உள்ளடக்கிய புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய இலச்சினையில் இடம்பெற்றிருக்கும் மஞ்சள் நிறம் ஆற்றல் மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், நீல நிறம் சுதந்திரம் மற்றும் உத்வேகத்தை குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. இலச்சினையைச் சுற்றி அமைந்துள்ள வட்ட வடிவம் தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னேற்றத்தின் சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இலச்சினையை திருப்பூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
வீரர்கள் கவுரவிப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற தேசிய வீராங்கனை பிரவீனா ஆகியோர் மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகில் அமர வைக்கப்பட்டு மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.