தினம்தினம் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 சரிவு
சென்னை: தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் நேற்று திடீரென பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.75,040க்கு விற்றது. அதன் பின்னர் தொடர்ந்து விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 6ம் தேதி பவுன் ரூ.75040க்கு விற்றது. இந்த விலை கடந்த மாதம் 23ம் தேதி ஒரு பவுன் ரூ.75040 என்ற உச்சபட்ச விலையை சமன் செய்தது. தொடர்ந்து 7ம் தேதி பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,200 என்றும், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் அடுத்தடுத்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரம் தொடர்ந்து 6 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2560 வரை உயர்ந்தது. தினம், தினம் புதிய உச்சத்தை தங்கம் விலை பதிவு செய்தது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, பெயரளவுக்கு தங்கம் விலை குறைந்திருந்ததை காண முடிந்தது. நேற்று கிராமிற்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.9,445க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.75,560க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் விற்பனையானது.