புதிய கின்னஸ் சாதனை மோடிக்கு 1.11 கோடி பேர் நன்றி போஸ்ட் கார்டு
அகமதாபாத்: குஜராத்தில் 1.11 கோடி பேர் நன்றி தெரிவித்து போஸ்ட் கார்டு அனுப்பியது புதிய கின்னஸ் சாதனையாக படைக்கப்பட்டது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து குஜராத் மாநில வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் அஞ்சல் அட்டை கடந்த 14ஆம் தேதி எழுதப்பட்டது. இதற்காக 75 லட்சம் அஞ்சல் அட்டை என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் 1,11,75,000 அஞ்சல் அட்டைகள் எழுதி அனுப்பப்பட்டது. உலகில் முதல் முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அஞ்சல் அட்டைகள் ஒரே நேரத்தில் எழுதப்பட்டன. இதையடுத்து நேற்று சபர்மதி ஆற்றங்கரையில் போஸ்ட் கார்டுகளை எண்ணிய பிறகு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு கின்னஸ் உலக சாதனைகளின்படி, முந்தைய சாதனையான சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 6,666 அஞ்சல் அட்டை எழுதியிருந்தது தான் சாதனையாக உள்ளது.