முதல்வரின் சமூக நீதி 2.0 எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியல்: புதிய வீடியோ வெளியீடு
சென்னை: திமுக தலைமை அலுவலகம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
சமூக நீதி என்பது வெற்று அரசியல் கோஷமல்ல, அது தமிழ்நாடு அரசியலின் உயிர் நாடி. நம் திராவிட மாடல் ஆட்சியினை சமூக நீதி 2.0 என்று அழைக்கும் அளவுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் கண்ட கனவு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் நனவாகி வருகிறது. கோடிக்கணக்கான பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் அவர்களின் சுய மரியாதையை காக்கவும் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களில் காலனி என்ற வார்த்தையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கான விடுதிகள் அனைத்தும் சமூக நீதி விடுதிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய சமூக நீதி கண்காணிப்பு குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, மகளிர் உரிமை ஆகிய துறைகளில் சமூக நீதி முழுமையாக செயல்படுத்த உறுதி செய்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நுாற்றாண்டை ஒட்டி, இன்று உலக புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாகியுள்ள சமூக நீதி 2.0 எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியல். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, முதல் மாநிலமாக, உயர்த்தும் சிந்தனையே முதல்வரின் சமூக நீதி 2.0. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.