சமூகத்தில் புதிய வகை குற்றங்கள் அதிகரிப்பு; தேசத்தை பாதுகாப்பதே காவல்துறை, ராணுவத்தின் முக்கிய நோக்கம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
புதுடெல்லி: காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் நேற்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த காவலர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், “காவல்துறையும், ராணுவமும் வெவ்வேறு தளங்களில் செயல்படுகின்றன. ஆனால் தேசத்தை பாதுகாப்பது மட்டுமே அவற்றின் முக்கிய நோக்கம்.
எல்லையில் தற்போது உறுதியற்ற தன்மை நிலவி வரும் சூழலில், சமூகத்தில் புதிய வகையான குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் கருத்தியல் போர்கள் உருவாகி வருகின்றன. இந்த குற்றங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, கண்ணுக்கு தெரியாத மற்றும் சிக்கலானதாக மாறி உள்ளது. அதன் நோக்கம் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்குவது, நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்துவது மற்றும் தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவால் விடுவதாகும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் வௌி மற்றும் உள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது” என்றார்.