புதிய திருப்பம்
உலக அரசியலில் தற்போது நிகழும் மாற்றங்களை பார்த்தால், இந்தியாவின் இன்னொரு முகத்தை அமெரிக்கா எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் நாட்டாமைத்தனம் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான் என்றாலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அதற்கு புதுவடிவம் கிடைத்தது. ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்கிற போக்கில் இந்தியாவில் பிரதமர் மோடி போன்றே டிரம்பும் செயல்பட தொடங்கியதில் ஆச்சரியமில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என கூறி கொண்டு ஒரேநாள் இரவில் பணமதிப்பிழப்பு திட்டத்தை மோடி அறிவித்தது போலவே, டிரம்பும் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கோஷத்தை வைத்து கொண்டு, யாரும் நிம்மதியாக வாழவிடாமல் தினம்தோறும் அறிவிப்பு அம்புகளை ஏவி கொண்டிருக்கிறார்.
இந்திய வணிகர்களின் தலையில் இடியாய் ஜிஎஸ்டி ஒருகாலத்தில் இறங்கியது. நரேந்திர மோடியை கூட நல்லவராக்க டிரம்ப் இப்போது முயல்வது அப்பட்டமாய் தெரிகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அமெரிக்காவின் வரிவிதிப்புகளை பார்த்தாலே நாடுகள் அனைத்தும் நடுங்குகின்றன. இஸ்ரேல்- காசா போர், இந்தியா- பாகிஸ்தான் போர் உள்ளிட்ட போர்களில் ஏதோ போரை தொடங்கியும், முடித்தும் வைத்தது நான்தான் என்பது போல் நாட்டாமை டிரம்ப் நடந்து கொண்டார். இதற்கு மத்தியில் ‘கூழுக்கும் ஆசை’ என்பதுபோல் டிரம்புக்கு நோபல் பரிசின் மீதும் ஒரு கண். அமெரிக்காவின் அவசர புத்திகளை காலம் கடந்தாவது உணர்ந்து கொண்ட ‘மோடி அன்கோ’ இப்போது பக்கத்து நாடுகளிடம் பாசமழை பொழிய தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் சீனாவில் தற்போது நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உலக கவனத்தை ஈர்க்கிறது. ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்று, சீன அதிபர் ஜிஜின்பிங்குடன் 45 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போர் பதற்றம் மிக்க கல்வான் பள்ளத்தாக்கில் இயல்பு நிலையை கொண்டு வருவது. இரு நாடுகளிடையே வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துதல், எல்லையில் பதற்றத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசியுள்ளனர். இதுதவிர அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தாக கூறப்படுகிறது. இம்மாநாட்டிலேயே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், மோடி சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இப்போதைய வெளியுறவு அரசியல் நிலைப்பாட்டில் நிகழும் மாற்றங்களை அமெரிக்கா கவனிக்க தொடங்கிவிட்டது. அமெரிக்க தேர்தலுக்கு முன்பு கூட ஆதரவு கொடுத்த நண்பன், இப்போது புறமுதுகு காட்ட தொடங்கிவிட்டதை டிரம்பின் போன்கால்களுக்கு இந்தியாவின் மவுனமே சாட்சி. அமெரிக்காவிற்கு ஆசியாவில் நல்லதொரு நண்பனாக இருந்த இந்தியா, இப்போது விலகி செல்வதை அமெரிக்காவால் பொறுக்க முடியாது. கடுமையான வரிவிதிப்புகள், குடியுரிமை பிரச்னை போன்ற மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகளில் மோடி போன்றே டிரம்பும் சிந்தித்தாலும், இருவரும் எதிரும், புதிருமாக மாறுவது அரசியல் களத்தை அதிர வைக்கிறது. இவ்வாண்டு இந்தியாவில் நடக்கவுள்ள குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக இருந்தது. டிரம்ப் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகும் நிலையில், மாநாடு நடத்தப்படுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.