புதிய சாலை அமைக்கும் பணிக்காக நெல்லை டவுன் நயினார்குளம் சாலை உடைக்கும் பணி துவக்கம்
*வாகன ஓட்டிகள் பாதிப்பு
நெல்லை : புதிய சாலை அமைக்கும் பணிக்காக நெல்லை டவுன் நயினார்குளம் சாலை உடைக்கும் பணி நடந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டவுன் காய்கறி மார்க்கெட், பொருட்காட்சி திடலில் வர்த்தக அரங்கம், சந்திப்பு பஸ்நிலையம், பாளை மார்க்கெட், நேரு சிறுவர் கலையரங்கம், பாளை பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் புரனமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதில் டவுன், பாளை காய்கறி மார்க்கெட்டுகளில் கடைகள் கட்டப்பட்டும் வியாபாரிகள் வராத நிலை காணப்படுகிறது.
இதனால் டவுன் காய்கறி மார்க்கெட் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது. நெல்லை டவுனில் கடல்போல் காணப்படும் நயினார்குளத்தின் கரைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, பூஞ்செடிகள், கரையில் அமர்ந்து குளத்தின் இயற்கை எழிலை கண்டுகளிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இங்கு நபர் ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை டவுனில் இருந்து செல்லும் நயினார்குளம் வழியாக செல்லும் சாலை வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதைதொடர்ந்து சாலை பாதி தூரம் சீரமைக்கப்பட்டு பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நயினார்குளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் மெகா பள்ளங்களுடன் சாலை காணப்பட்டது. இதனால் வாகனங்கள் தட்டுதடுமாறி சென்று வந்தன.
மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலையை உடைத்து எடுக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.