வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டில் மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருவதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், நேற்று காலையில் 28டிகிரி செல்சியசுடன் வெப்பநிலை தொடங்கியது. மதியம் 34 டிகிரியாக வெப்பநிலை இருந்தாலும் அது 38 டிகிரி செல்சியஸ்(100 டிகிரி பாரன்ஹீட்) ஆக உணரப்பட்டது. நேற்று , சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ்(95டிகிரி பாரன்ஹீட்) வரையில் இருந்தது.
இந்நிலையில், வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடலேராப் பகுதியை ஒட்டிய கடல் மட்டத்தில் இருந்து 5.8கிமீ வரை, தென்மேற்கு பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அது மேலும் வலுப்பெற்று வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும், வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதியின் மேலே வடக்கு கடலோரப் பகுதியில் இருந்து ஒடிசா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்றும் உருவாகிறது.
அந்த பகுதியின் கீழ் வெப்பமண்டலப் பகுதியில் மிதமான மற்றும் மேற்கு தென்மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசுகிறது. இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.