பிள்ளையார்பட்டியில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்திப் பெருவிழா தேரோட்டத்தில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேருக்கான வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சதுர்த்திப்பெருவிழா தேரோட்டத்தில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேருக்கான வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
இங்கு நடைபெறும் சதுர்த்தி விழாவின் தேரோட்டத்தில் கற்பகவிநாயகர் தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். சப்பரத்தில் வரும் சண்டிகேஸ்வரரை பெண் பக்தர்களே உற்சாகமாக வடம் பிடித்து செல்வர். தற்போது சப்பரத்திற்கு பதிலாக சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக புதிய தேர் நேற்று கோயில் ராஜகோபுரத்திற்கு முன்னதாக பீட ஸ்தானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதுகுறித்து நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் கூறுகையில், ‘‘திருக்கோயில் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறும்’’ என்றனர்.