ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்தது
*பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தை அக். 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால் ராமநாதபுரத்திற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி போன்ற ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்ட, மாநில, வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் ராமநாதபுரம் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குகிறது. இதனை போன்று ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அருகில் பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளும் உள்ளன.
இதனால் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குகிறது. இங்கு சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள், மதுரை உள்ளிட்ட தென் மண்டலம், விழுப்புரம் உள்ளிட்ட வட மண்டலம், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மண்டலம், கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி,சிதம்பரம்,புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை பகுதி என மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்கள், சுற்றுலாதலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள 6 பஸ் டிப்போக்களிலிருந்து 120 டவுன் பஸ்கள் உட்பட 320க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரத்திற்கு நாள் ஒன்றிற்கு 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. இதனால் ராமநாதபுரம் மையப்பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் 2023ம் ஆண்டில் ரூ.20 கோடி மதிப்பில் 16,909 சதுர அடி பரப்பில் புதியதாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் 100 கடைகள், 231 டூவீலர் நிறுத்துமிடம், பயணிகளை இறக்கி விட்டு செல்ல கார் அனுகுசாலை, குடிநீர், பொதுகழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது. இதனால் 2 ஆண்டுகளாக ரயில்நிலையம் எதிரே உள்ள பழைய பஸ்நிலையம் தற்காலிக பஸ்நிலையமாக இயங்கி வந்தது.
இந்தநிலையில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் அக்.3ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த அரசு திட்டபணிகள் வழங்குதல், முடிந்த பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் பஸ் நிலையத்தை துவக்கி வைத்தார்.
பஸ் நிலையம் நுழைவு வாயிலில் கலைஞர் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் அனைத்து மினி பஸ், அரசு டவுன் பஸ் முதல் அரசு விரைவு பஸ்கள் வரை அனைத்து பஸ்களும் வந்து செல்கிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிளாட்பார்ம்களில் இருக்கை வசதி
நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் கூறும்போது, புதிய பஸ் நிலையம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர்,கழிவரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சத்துடன் இயங்கி வருகிறது.
பயணிகள் காத்திருப்பு அறையில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் நலன் கருதி பிளாட்பார்ம்களில் நடைபாதைக்கு இடையூறு இன்றி இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் எடுத்தவர்களை விரைவில் திறக்க அறிவுறுத்தியுள்ளோம், உரிய வியாபாரிகள் அனைத்து கடைகளையும் விரைவில் திறப்பார்கள், அனைத்து பஸ்களும் வந்து செல்கிறது, நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் மற்றும் வளாகம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
சிசிடிவி கேமரா வசதி
பயணிகள் கூறும்போது: புதிய பஸ்நிலையம் நவீன கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. காத்திருப்பு அறையில் இருக்கைகள், மின்விசிறி, மொபைல் சார்ஜர் பாயிண்ட் உள்ளிட்டவை இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. இதனை போன்று குடிநீர், சுத்தமாக கழிவறை வசதி இருக்கிறது. ஊரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் நகரின் பிற பகுதிகளுக்கு வந்து செல்ல எளிதாக இருக்கிறது.
இரவு நேரத்தில் பயமின்றி வந்து செல்ல முடியும். மேலும் டூவீலர் பார்க்கிங் வசதி உள்ளேயே இருப்பதால் வெளியூர் சென்று, வர எளிதாக இருக்கிறது. மிக முக்கியமாக கூடுதலாக சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி இருப்பதால் பாதுகாப்பு தன்மை உறுதியாக உள்ளது. விசாலமான இடமாக உள்ளதால் டவுன் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் ஏறி, இறங்க வசதியாக உள்ளது, என்றனர்.