வலையில் சிக்கிய 300 கிலோ சுறா ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை
கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விசைப்படகின் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கடற்கரையிலிருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு விசைப்படகில் இருந்த மீனவர் வலையில் மிகப்பெரிய மீன் சிக்கியது. அதனை மற்ற படகுகளின் உதவியுடன் துறைமுகத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மீனவர்கள் வலையில் சிக்கியது 300 கிலோ எடை, 3 அடி அகலம், 12 அடி நீளம் கொண்ட சுறா மீன் ஆகும். அபூர்வமாக வலையில் சிக்கிய இந்த சுறா மீன் ரூ.1.5 லட்சம் விலை போய் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.