பெண் ஊழியருடன் காதல்; நெஸ்லே நிறுவன சிஇஓ பதவி பறிப்பு
ஜூரிச்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவுப் பெருநிறுவனமான நெஸ்லே, தனது தலைமைச் செயல் அதிகாரி லாரன்ட் பிரெக்ஸை பதவி நீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருடன் இருந்த காதல் உறவை அவர் நிர்வாகத்திடம் தெரிவிக்கத் தவறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் பால் பல்கே தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், லாரன்ட் பிரெக்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, இந்த பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்குப் பதிலாக, பிலிப் நவ்ராடில் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றிய பிரெக்ஸுக்கு, பணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவிதமான நிதிப் பலன்களும் வழங்கப்படாது என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.