நேபாளத்தை போராடி வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்
வங்கதேசம் 19.3 ஓவரில் 106 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன் (22 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார். மகமதுல்லா, ரிஷத் தலா 13, ஜேகர் அலி, டஸ்கின் அகமது தலா 12, லிட்டன் தாஸ் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நேபாள பந்துவீச்சில் சோம்பால், திபேந்திரா, ரோகித், சந்தீப் தலா 2 விக்கெட் எடுத்தனர் (2 பேர் ரன் அவுட்). அடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணியும் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. தன்ஸிம் ஹசன், முஸ்டாபிசுர், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாத நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன் மட்டுமே சேர்த்து 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
குஷால் மல்லா 27 ரன், திபேந்திரா சிங் 25, ஆசிப் ஷேக் 17 ரன் எடுத்தனர். 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டானதுடன், 2 பேர் தலா 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பியது நேபாள அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வங்கதேச பந்துவீச்சில் தன்சிம் ஹசன் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 7 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். முஸ்டாபிசுர் ரகுமான் தன் பங்குக்கு 4 ஓவரில் 1 மெய்டன், 7 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்த, ஷாகிப் ஹசன் 2, டஸ்கின் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டி பிரிவில் இருந்து 2வது அணியாகவும், லீக் சுற்றில் இருந்து கடைசி அணியாகவும் வங்கதேசம் சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது. அந்த அணியின் தன்சிம் ஹசன் சாகிப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.