நேபாள வன்முறையை பதிவு செய்த பிரபல யூடியூபர்: தீ வைப்பு, கண்ணீர் புகை குண்டு வீசுவது போன்றவை பதிவு!
காத்மாண்டு: நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறையை பிரபல யூடியூபர் பதிவு செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நேபாளத்தில் வாட்ஸஅப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக GEN Z இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 34 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். போராட்டத்திற்கு பணிந்து குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு பைக் பயணம் மேற்கொண்ட ஹேரி என்ற யூடியூபர், நேபாளத்தில் பயணத்தில் இருந்தபோது கலவரத்துக்கு நடுவே சிக்கி கொண்டார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட வன்முறை, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவற்றை அவர் படம் பிடித்துள்ளார். கலவரத்துக்கு இடையே தைரியமாக பயணம் செய்து வீடியோ எடுத்த அவர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் இருந்து தப்பி செல்வது, போராட்டக்காரர்களின் கருத்து போன்றவற்றையும் பதிவு செய்துள்ளார். ஹேரி படம் பிடிக்கும் போது அவரிடம் சென்ற போராட்டகாரர் ஒருவர் அவரை பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்த கருத்துக்கு பலரும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 23 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.