கலவரத்தை பயன்படுத்தி நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 13,000 கைதிகள் : இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 35 பேர் கைது!!
காத்மாண்டு : நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகளில் 35 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது.நாடாளுமன்றம் கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என மூத்த தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதனிடையே நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வெடித்த கலவரத்தை பயன்படுத்தி, அந்நாட்டில் பல்வேறு சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இந்தியாவில் ஊடுருவக் கூடும் என்பதால் இந்தியா - நேபாளம் எல்லையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லைகளில் 35 நேபாள கைதிகள் பிடிபட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச எல்லையில் 22 கைதிகள், பீகார் எல்லையில் 10 கைதிகள், மேற்கு வங்க எல்லையில் 3 கைதிகள் இந்தியாவில் நுழைய முயன்ற போது, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.