நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை..வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!
நேபாளம்: நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60ஐ தாண்டி உள்ளது. நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோசி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேபாளத்தின் தென்கிழக்கு மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பலர் புதையுண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.