நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது.. ஊரடங்கு உத்தரவு நீக்கம்: சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
டெல்லி: நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக நேபாளத்தில் கடந்த 8ம் தேதி GEN Z தலைமுறையினர் தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு பணிந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நேபாளத்தில் கே.பி.சர்மா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது. பிரதமர் கே.பி.சர்மா பதவி விலகி அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். நேபாளத்தின் இடைக்கால தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை (வயது 73) தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இடைக்கால அரசுன் தலைவராக பதவியேற்கும்படி சுசீலா கார்கிக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை சுசீலா கார்கி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், நேபாள அரசின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி இன்று பதவியேற்றுக்கொண்டார். இரவு 9 மணிக்கு நேபாளத்தின் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றார். இயல்பு நிலை திரும்பிய நிலையில் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
நேபாள இடைக்கால பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து:
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள கௌரவ திருமதி சுஷிலா கார்க்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதியாக உறுதிபூண்டுள்ளது.