நெமிலி அடுத்த புன்னையில் ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் சுகாதார நிலைய கட்டிடம்
*அமைச்சர், கலெக்டர் அடிக்கல் நாட்டினர்
நெமிலி : நெமிலி அடுத்த புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார நிலைய கட்டிடம் கட்ட அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நெமிலி அடுத்த புன்னையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினம்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் நெமிலி பேரூராட்சியில் 15-வது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், செயல் அலுவலர் எழிலரசி, தாசில்தார் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், பெருமாள், மணிவண்ணன், நகரச் செயலாளர் ஜனார்த்தனன், வர்த்தக அணி அமைப்பாளர் ராகேஷ் ஜெயின், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.