நெல்லிக்குப்பம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் ஜம்புலிங்கம் பூங்கா திடலில் திங்கள் கிழமை இரவு நேர வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி சந்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நகராட்சி மூலம் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு சுங்கவரி வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி வருகின்றனர். காய்கறிகள் விற்பனை செய்பவர்களிடம் சுங்க வரி வசூல் செய்யும் நகராட்சி அதிகாரிகள் சந்தை நடக்கும் இடத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி ஏற்படுத்தித் தரவில்லை என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காய்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மழை காலத்தில் பெரும் சிரமத்துக்குள்ளாகி மழையில் நினைந்தபடி தரையில் அமர்ந்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். குடிநீர் வசதி, கழிவறை வசதி, சாலை வசதி இல்லை. சந்தை நடக்கும் இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சந்தையில சாலை, குடிநீர், கழிவறை வசதி, வியாபாரிகளுக்கான தொகுப்பு கட்டிடங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.