நெல்லை அருகே பரபரப்பு ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை: பள்ளி வேன்களுக்கு தீ, உறவினர்கள் மறியல், 50 பேர் மீது வழக்கு
அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவரை கடந்த 4ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர், கடந்த 7ம் தேதி பள்ளிக்கு வந்ததும் வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். மைதானத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தபோது சபரிகண்ணன் மயங்கி விழுந்தார்.
ஆசிரியர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சபரி கண்ணனை மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன், நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சபரிகண்ணனின் உறவினர்கள் நெல்லை-அம்பை மெயின்ரோட்டில் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மாணவனின் உடல் வந்த ஆம்புலன்சுடன் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் தற்கொலைக்கு காரணமான பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர்.
உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சபரிகண்ணனின் உறவினர்கள் மறியலை கைவிட்டு மானாபரநல்லூர் சுடுகாட்டில் மாணவனின் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில் இரவு 11.30 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு வழியே வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பள்ளி வேன்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 2 வேன்களும் முற்றிலும் கருகி நாசம் அடைந்தன.
தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் வந்து தீ வகுப்பறைகளுக்கு பரவாமல் அணைத்தனர். இதையடுத்து மாணவனின் மரணம் குறித்து ஒரு வழக்கு, சாலை மறியலில் ஈடுபட்டதாக மாணவனின் தந்தை, வக்கீல்கள் 4 பேர் உள்பட 50 பேர் மீது ஒரு வழக்கு, வேன் தீவைப்பு சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு என 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரித்ததில் வேன்களுக்கு தீ வைத்த அரிகேசவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவன் அரிகரன் (18) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெள்ளங்குளியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண் (18) என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.