நெல்லையில் கார் கண்ணாடி உடைத்த விவகாரம் அண்ணனுக்கு பதில் தம்பி வெட்டிக்கொலை: ‘ஏ பிளஸ்’ ரவுடி உட்பட 2 பேருக்கு வலை
நெல்லை: நெல்லை அருகே கார் கண்ணாடி உடைத்த விவகாரத்தில் அண்ணனுக்கு பதிலாக தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கோவில்பத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் அருண் செல்வம் (29). செய்துங்கநல்லூரில் சிமென்ட் கடை நடத்தி வந்தார். இவரது அண்ணன் கார்த்திக்கின் கார் கண்ணாடியை, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற போஸ் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு உடைத்ததாக கூறப்படுகிறது. ரவுடியான இசக்கிமுத்து என்ற போஸிடம் அதற்கான நஷ்டஈட்டை கார்த்திக் கேட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாளை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு அருண்செல்வம் தனது நண்பரான செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஜலீல் என்பவருடன் சென்றுள்ளார். அங்கு இசக்கிமுத்து, அவரது கூட்டாளியுடன் மது அருந்தச் சென்றுள்ளார். அருண் செல்வத்தை பார்த்ததும், கார்த்திக் என நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அருண்செல்வம் நீங்கள் பார்த்தது எனது அண்ணனை எனக்கூறியதாகவும், ஆனாலும் அவர்கள் நம்ப மறுத்து அரிவாளால் வெட்ட வரவே, அவர் ஜலீலுடன் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், இசக்கிமுத்து அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் விரட்டினார்.
அவரிடமிருந்து தப்பிக்க, காவல் சோதனைச் சாவடிக்குச் செல்லலாம் என அருண்செல்வம் பைக்கை ஓட்டியுள்ளார். எதிர் திசையில் வாகனங்கள் வந்ததால் அவரால் வேகமாகச் செல்ல முடியவில்லை. அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இசக்கிமுத்துவும், அவரது கூட்டாளியும், கிருஷ்ணாபுரம், பெட்ரோல் பங்க் அருகே அருண் செல்வத்தின் பைக்கின் மீது மோதினர். நிலைதடுமாறி கீழே விழுந்த அருண்செல்வத்தை முதுகிலும், மணிக்கட்டிலும் அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற நண்பர் ஜலீலின் தலையிலும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கிமுத்து மற்றும் அவருடன் வந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,‘‘இசக்கிமுத்து என்ற போஸ் மீது கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடி பட்டியலில் உள்ளார். கார்த்திக்கிற்கும், இசக்கிமுத்துவிற்கும் இருந்த முன்விரோதத்தில் கார்த்திக்கை போல் இருக்கும் அவரது தம்பியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்’’ என்றனர்.