நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பேராசிரியரும், முனைவருமான தொ.பரமசிவன் பெயரை நெல்லை மாவட்ட சாலைக்கு வைக்க வேண்டும் என நெல்லை மக்களும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் மே மாதம் அனுப்பப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொரப்பு தீர்மானத்தில் தமிழகத்தின் மிக முக்கிய தமிழறிஞராக திகழ்ந்த தொ.பரமசிவன் நினைவாக திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்டு சாலைக்கு அவரது பெயரை சூட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிறப்பு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொ.பரமசிவன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆய்வு நூல்கள், பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.
இவரது நூல்களை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு நாட்டுடைமையாக்கி அதற்கான ஊக்கத்தொகையை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியது. இந்த நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.