நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் நாளை முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்
நெல்லை: நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நெல்லையில் புறப்பட்டு 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்னையை சென்றடைகிறது. ஆரம்ப காலத்தில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்நிலையில் இந்த ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கிட தெற்கு ரயில்வே ஒப்புக் கொண்டது. அதன்படி நாளை (9ம் தேதி) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தேபாரத் ரயில் நின்று செல்லும். அதாவது காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 6.38 மணிக்கு கோவில்பட்டி செல்லும். அங்கு 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு 6.40 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். மறு மார்க்கத்தில் சென்னை - வந்தே பாரத் ரயில் இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி வந்து சேரும். 2 நிமிடங்கள் அங்கு நிறுத்தப்பட்டு இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும்.