நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் தராமல் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.
குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலை ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்; மசோதா மீதான ஒப்புதலை ஜனாதிபதி நிராகரித்தது சட்ட விரோதம். மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.