நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்!!
சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 753 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வீல் சேர் பயன்படுத்தும் மாணவர்கள், சிறிய குறைபாடுகள் உடைய மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு நடப்பது, நிற்பது, படிகள் ஏறுவது உள்ளிட்ட 7 விதமான உடல் தகுதிகளை தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது.
இதில் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அவர்கள் நிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கலந்தாய்வு குழுவினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் விதிமுறைகள் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் கலந்தாய்வு குழுவில் ஒரு மாற்றுத் திறனாளி மருத்துவர் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல்முறையீடு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இந்த 2 உத்தரவுகளையும் தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுத்தவில்லை என்றும், இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.