என்டிஏ கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘காக்கி உயர் அதிகாரி உத்தரவை மீறி பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவரை ராஜஉபசாரம் செய்து வழியனுப்பிட்டதா சொல்றாங்களே எங்க..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்துல இப்போது இருக்கிற காக்கி உயர் அதிகாரி ரொம்ப கறாரானவராம்.. குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுங்க என்று காக்கிகளுக்கு கடும் உத்தரவு போட்டு இருக்கிறாராம்.. இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தாலே போலீசு, இப்போது சிட்டாக வேலை பார்த்து கேஸ் போட்டு குற்றவாளியை பிடிக்கிறாங்களாம்.. ஆனால் மாவட்ட தலைநகரில் உள்ள அந்த காவல் நிலையத்துல இதுபோன்ற ஒரு புகாரை மென்மையாக பேசி அனுப்பி வைச்சி இருக்கிறார்களாம்.. கடந்த ஆயுதபூஜை அன்றைக்கு, பெண் குழந்தை கிட்ட ஆபாசமாக செய்கை செய்தான் என்று ஒருத்தரை பிடிச்சுட்டு வந்து அந்த ஸ்டேஷனில பொதுமக்கள் ஒப்படைச்சு இருக்காங்க.. ஆனால் அந்த காவல் நிலையத்துல இருக்கிற பெண் காக்கி ஒருவர், இந்த ஆசாமிக்கு சொந்தமாம்.. இதனால காக்கி பெண் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கு.. கேஸ் போடாமலும் இருக்கணும், சிக்கலும் வரக்கூடாது என ஆலோசனை நடத்தி, அந்த நபரை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆபீசுக்கு அனுப்பி வைச்சுட்டாங்களாம்.. ஆனாலும் அந்த ஆளு இன்னும் வீதியில ஹாயாக சுத்தி வருகிறாராம்.. ஏற்கனவே அந்த ஆளு, படு மோசமான செய்கைகள் செய்து பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவராம்.. இப்படிப்பட்டவரை ராஜ உபசாரம் செய்து காக்கிகள் வழியனுப்பி வச்ச விவகாரம் இப்போது சர்ச்சையாகி இருப்பதாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லகரங்களில் கவனித்தால் மட்டும் உடனே பணப்பலன் கிடைப்பதால் ஓய்வுபெறும் பலரும் புலம்பி தவிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் பல்கலையில் ஓய்வுபெறும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று மாதத்திற்கு முன்பே ‘நோ டியூ’ எனும் நிலுவை இல்லா சான்றிதழ் கேட்டு பல்கலை நிர்வாகம் பல்வேறு துறைகளுக்கு நேட்டீஸ் அனுப்பி வைப்பது வழக்கம்.. இதன்பேரில், அந்தந்த துறைகள் பல்கலைக்கழகத்திற்கு ‘நோ டியூ’ சான்றிதழ் வழங்குமாம்.. அதனைத் தொடர்ந்துதான் குறிப்பிட்ட நபர் ஓய்வு பெறுவாராம்.. அதனடிப்படையிலேயே அவருக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும்.. தற்போது நிலைமை வேறு மாதிரி மாறிக் கொண்டிருக்கிறதாம்.. பல்கலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தணிக்கைத் துறை அதிகாரிகளை ஓய்வு பெறுவோர் லகரங்களில் கவனித்தால் போதுமாம்.. அவர்கள் மீது எந்த பிரச்னை இருந்தாலும் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு ‘நோ டியூ’ வழங்கி விடுகிறாங்களாம்.. கவனிக்காதவர்கள் ‘நோ டியூ’ கேட்டால் இந்தா... அந்தா... என்று இழுத்தடிப்பு வேலை நடந்து சம்பந்தப்பட்டவரை நொந்து நூடுல்ஸ் ஆக வைத்து விடுகிறதாம்.. இந்த விவகாரத்தில் தணிக்கை துறையினர் எக்கச்சக்கத்துக்கு கல்லா கட்டி வருகின்றனராம்.. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்த வகையில் இவர்கள் பெரும் தொகையை கல்லா கட்டியதாக தெரிகிறது. இதனால் பணம் கொடுக்காத பலரும் பணப்பலன்களை பெறுவதில் தொடர் சிக்கல் நீடிப்பதாக ஓய்வு பெறுபவர்கள் புலம்பித் தவிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மன்னர் மாவட்டத்தில் மலராத கட்சியின் முன்னாள், இன்னாள் தலைவர் அணியினர் மோதலால் ஆலோசனை கூட்டம் அவசர அவசரமாக முடிஞ்சி போச்சாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இன்னும் சில நாட்களில் மன்னர் மாவட்டத்திற்கு மலராத தேசிய கட்சியின் மாநில தலைவர் வர உள்ளாராம்.. இதை தொடர்ந்து கடந்த வாரம் மன்னர் மாவட்டத்தில் கருப்பானவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கு.. இதில் முன்னாள் தலைவர் அணியினரும், இப்போது உள்ள தலைவர் அணியினரும் தங்களது பிரச்னைகளை ஆவேசமாக தெரிவிச்சாங்களாம்.. இந்த பிரச்னையை கேட்ட கருப்பானவரால் இவர்களை சமாளிக்க முடியாமல் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துவிட்டு சென்று விட்டாராம்.. இந்த விவகாரத்தில் எம்ஜிஆர் பெயர் கொண்டவருக்கும், முருகன் பெயர் கொண்டவருக்கும் பெரும் பணிப்போர் நடந்ததாம்.. இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீண்ட புகார் வாசிக்க இருவரையும் சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க சென்றுள்ளாராம்.. விரைவில் மன்னர் மாவட்டத்திற்கு வரும் மாநில தலைவர் முன்னிலையில் இந்த மோதல் எதிரொளிக்கும் என கட்சி நிர்வாகிகள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யூனியன் பிரதேச என்டிஏ அணியில் திடீர் சலசலப்பாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்குது.. புல்லட்சாமி அமைச்சரவையில் அங்கம் வகித்த மலராத கட்சியின் ‘சாய்’ ஆனவர், கட்சியின் மேலிடத்தால் பதவியில் இருந்து சாய்க்கப்பட்டார்.. இதனால், தொகுதி பிரச்னைக்காக அவ்வப்போது வீதியில் இறங்கி போராடுகிறாரு.. ஆளும் தரப்பு பொருட்படுத்தாத நிலையில் சொந்த கட்சியும் கண்டுகொள்ளாததால் மக்கள் பிரதிநிதிக்கான சபையில் போராட்டம் நடத்த முடிவெடுத்தாராம்.. நீண்ட நாளுக்கு பின் நேற்று சபையின் தனது அலுவலகத்துக்கு வந்தவர் சட்டம்-ஒழுங்கிற்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் கொந்தளித்தாராம்.. அத்துடன் தன்னைப்போலவே பதவியை இழந்த புல்லட்சாமி கட்சி பிரதிநிதியான தாழ்த்தப்பட்ட காரை. அம்மணிக்கு ஆதரவாகவும் திடீரென குரல் கொடுத்தாராம். புல்லட்சாமி ஆட்சியில் மக்களின் உரிமை பறிபோய் இருப்பதாக குமுறிய ‘சாயா’னவர், 15 நாளில் கோரிக்கையை தீர்க்காவிடில் உண்ணாவிரதம்தான் என எச்சரித்துள்ளாராம்.. இதனால் புல்லட்சாமி கடும் அப்செட்டில் உள்ளாராம். இந்த விவகாரம் யூனியன் என்டிஏ அணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.